பொம்மிடி 

தர்மபுரியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதிபட்டுள்ளது.

கடந்த 8 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தர்மபுரி மாவட்டத்தில் ‘என் மண், என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பொம்மிடியை அடுத்த பி.பள்ளி பட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை மாதா ஆலயத்திற்குச் சென்றார். அவரை அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ வாலிபர்கள், ஆலயத்துக்கு வரக்கூடாது என்றும், மாதா சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என்றும் கூறி தடுத்து நிறுத்தினர்.

மேலும் அவரை அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு கோஷம் எழுப்பி மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பினர்.  எனவே அங்கு அண்ணாமலைக்கும், கிறிஸ்தவ வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அண்ணாமலை மணிப்பூரில் நடந்தது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு என்றும், அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் அனைவரும் ஆலயத்துக்கு வர உரிமை உள்ளது. மேலும் ஆலயம் உங்கள் பெயரில் உள்ளதா? என்று தடுத்து நிறுத்தியவர்களிடம் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். அப்போது அங்கு காவல்துறையினர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்களை அந்த பகுதியில் இருந்து வெளியேற்றினர்.  பிறகு ஆலயத்துக்குள் சென்ற அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.

தற்போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பொம்மிடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார்த்திக் என்பவர் பொம்மிடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.