சென்னை: பட்டியலின சமூகத்தினர் ஏமாற்று பேர்வழிகள் என்று கூறிய நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை சட்டத்தில் புகார் பதியப்பட்டுள்ள நிலையில், நாளை விசாரணைக்கு ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

பட்டியலின சமூகத்தினர் ஏமாற்று பேர்வழிகள்; அந்த சமூகத்தை சேர்ந்த அனைவரையும் சினிமாவை விட்டே துரத்த வேண்டும் என்றும் நடிகை மீதான மிதுன் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலர் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில், ” திரைப்பட நடிகை மீரா மிதுன் தனது  டிவிட்டர் பக்கத்தில்  பட்டியலின மக்களை மிக கேவலமாக திட்டி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.  திரைப்பட துறையில் இருந்தே பட்டியலின சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.தா ழ்த்தப்பட்ட மக்களை கேவலமாக பேசி வீடியோ பதிவிட்ட மீரா மிதுன் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதையடுத்து,  நடிகை மீரா மிதுன் நாளை விசாரணைக்க ஆஜராக  சென்னை மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.