நாங்குநேரி:
இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குனேரி தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக திமுக எம்.எல்.ஏ சரவணகுமார் உட்பட 6 திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல, , எம்.எல்.ஏ உள்பட திமுகவினர் பணம் கொடுப்பதை தடுத்து தகராறு செய்தாக கிராம மக்கள் 25 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், டிவிட்டரிலும் டிரெண்டிங்காகி வருகிறது.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 21ந்தேதி நடைபெற உள்ளது. அங்கு திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். தற்போது, அங்கு இறுதிக்கட்ட சூறாவளிப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அம்பலம் என்ற கிராமத்தில் தங்கி இருந்து தேர்தல் பணியாற்றி வந்த பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணகுமார் தலைமையில் திமுகவினர், அருகில் உள்ள கல்லத்தி கிராமத்திற்கு சென்று வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த அம்பலம் கிராம மக்கள், பணம் கொடுத்த நபர்களை விரட்டியபோது, அவர்கள் திமுக எம்.ஏல்.ஏ சரவணகுமார் தங்கி இருந்த வீட்டுக்குள் சென்று பூட்டிக்கொண்டனர்.
இதனால் அங்கு பதற்றம் நிலவியது. ஆனால், கிராமமக்கள் விடாமல் அவர்களை வீட்டுக்குள் சென்று பிடிக்க முயன்றனர். அப்போது, வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த திமுக எம்எல்ஏ கிராம மக்களுடன் வாக்குவாதம் செய்ததைத் தொடர்ந்து இரு தரப்பினரக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, திமுக எம் எல் ஏ வை சரவணன் உள்பட திமுகவினரை வீட்டுக்குள் தள்ளி பூட்டி வைத்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எம் எல் ஏ வை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கே சிதறி கிடந்ததாக கூறி பொதுமக்கள் கொடுத்த 2,78,000 ரூபாயை கைப்பற்றி பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் உட்பட 6 திமுகவினர் மீது ஜனநாயகத்திற்கு விரோதமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் ((143,171இ,171பி,173,Rp act)) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல சட்டமன்ற உறுப்பினரை தாக்கியதாக அம்பலம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், சீனிராஜ், முருகேஷ் உள்ளிட்ட 25 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் ((147,448,323,329ipc)) மூலக்கரைப்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளமான டிவிட்டரிலும் டிரெண்டிங்காகி வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி, நாங்குநேரி தொகுதியில் பிடிபட்ட பணம் தங்களுடையது அல்ல என்றும், எதிர் தரப்பு பணத்தை கொண்டு வந்து வீசி விட்டு கதை கட்டுவதாக தெரிவித்து உள்ளார்.
[youtube-feed feed=1]