சென்னை:

மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதிக்கெடு விதித்துள்ளது. மேலும் விசாரணை அதிகாரியை மாற்றியும் உத்தரவிட்டது.

சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அமைச்சர் வேலுமணி தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு நெருக்கமான வர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு  விசாரித்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  மாநகராட்சி டெண்டர் முறைகேடு குறித்து அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக அளித்த புகாரில் ஆரம்பக் கட்ட விசாரணை நடத்த பொதுத் துறை முதன்மை செயலாளர் அனுமதியளித்துள்ளார். அதன்படி அமைச்சருக்கு எதிராக ஆரம்பக் கட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு விசாரணையை தொடரலாம் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை  தள்ளி வைத்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை அதிகாரியான லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி சங்கர் ஆஜராகி, முறைகேடு புகார் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். அத்துடன்,  முழுமையான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 3 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கில்  எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்து, மேற்கொண்டு விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி பொன்னி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.  அத்துடன், விசாரணையை கண்காணித்து 2 வாரங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் இதுவரை பதிலளிக்காத அமைச்சர் வேலுமணி பதிலளிக்க 2 வாரம் கடைசி கெடு விதித்து விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.