சென்னை,

ரட்டை இலை சின்னம் விவகாரம்  கூடுதல் அவகாசம் வழங்க தலைமை தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட கோரி தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

நாளை இரட்டை சம்பந்தமாக தேர்தல் கமிஷன் இறுதி விசாரணை நடத்த உள்ள நிலையில், இந்த தீர்ப்பு தினகரன் தரப்புக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

முடக்கப்பட்டுள்ள அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை தொடர்பாக வரும் அக்டோபர் 6ந்தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அப்போது அதிமுக அணிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் அறுவுறுத்தி இருந்தது.

இதில் தங்களது தரப்பு ஆவணங்கள் தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்டு டிடிவி தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தனர். அந்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து,  தங்களது தரப்பு ஆவனம் தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கொடுக்க தேர்தல் ஆணையத்துக்கு  உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் டிடிவி தரப்பு சார்பில் கடந்த 3ந்தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, டிடிவி தரப்பினரின் அவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

இதன் காரணமாக டிடிவி தரப்பினரின் கடைசி அஸ்திரமும் புஸ்வானமாகி போனது.

நாளை தேர்தல் கமிஷன் இரட்டை இலை தொடர்பாக இறுதி விசாரணை நடத்த உள்ளது. ஏற்கனவே அதிமுக பொதுக்குழுவை கூட்டடி எடப்பாடி தரப்பினர் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி அதை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ள நிலையில், டிடிவி தரப்பினரின் கடைசி ஆயுதமும் நிராகரிக்கப்பட்டுள்ளது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இதன் காரணமாக அதிமுக மற்றும் இரட்டை இலை எடப்பாடி தலைமையிலான அணிக்கே செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.