சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக மேல் விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. கடந்த 13ஆம் தேதி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை முதலில் இருந்தே விசாரிக்க வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றமும் அதற்கு அனுமதியளிக்க சயனிடம் காவல்துறையினர் சில தினங்களுக்கு முன்னர் ரகசிய விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், கொடநாடு  வழக்கு தொடர்பாக ஏற்கனவே விசாரிக்கப்பட்டு விட்டதாகவும், குற்றப்பத்திரிக்கை  தாக்கலான  பிறகு மீண்டும் விசாரணை நடத்த  தடை வித்திக்க கோரி, கோயம்புத்தூரை சேர்ந்த  ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரரின் கோரிக்கைக்கு அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்தலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.