சென்னை: அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிப்பது குறித்து  சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி முடிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறார். இந்த வழக்குகளின் இறுதி விசாரணை பிப்ரவரி 5ந்தேதி முதல் மீண்டும் நடைபெறும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு அமைச்சர்கள் சார்பில் மேல்முறையீடு  செய்யப்பட்டது. அதாவது, முடித்துவைக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு எதிராக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை  நேற்று காரமாக  நடைபெற்றது.

உச்சநீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, தலைமை நீதிபதி உரிய ஒப்புதல் வழங்கும் முன்பே தனி நீதிபதி விசாரணையை தொடங்கியுள்ளார் என பதிவாளர் அறிக்கையை குறிப்பிட்டு மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம் முன்வைத்தார். தாமாக முன்வந்து வழக்கினை விசாரிப்பதற்கு ஒரு நடைமுறை உள்ளது, அதனை தனி நீதிபதி பின்பற்றவில்லை என குற்றம் சாட்டினார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் செயல்கள், நீதிமன்ற நடைமுறைகளுக்கு எதிரானது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது கீழமை நீதிபதிகள், அமைச்சர்கள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து விடுகின்றனர் என்று நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா கூறினார். எனினும், வழக்கை பட்டியலிடும் முன்னர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அனுப்பியிருக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு கூறியதாவது,  அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகளை தலைமை நீதிபதியே விசாரிக்கலாம் அல்லது எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை அவரே பரிந்துரைக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இதனால் வழக்கை யார் விசாரிப்பது என்பதில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த உத்தரவு, தலைமை நீதிபதியின் அனுமதி பெறாமல் தானாக விசாரணைக்கு எடுத்த மற்ற வழக்கு களுக்கும் பொருந்தும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து  வழக்கை பிப்.,7க்கு ஒத்திவைத்தது.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அமைச்சர்கள் மீதான வழக்குகளின் விசாரணை நாளை மறுநாள் (பிப்.,7) நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை படித்து பார்த்து அதன் அடிப்படையில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.