சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த எடப்பாடி அரசு  2017-ம் ஆண்டு,ஓய்வுபெற்ற நீதிபதி  ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, விசாரணை நடைபெற்று வந்தது. 100க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், அப்போலோ மருத்துவமனையின் வழக்கை ஏற்று, ஆறுமுகம்சாமி ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கடந்த ஒரு வருடமாக ஆறுமுகசாமி ஆணையம் செயல்படாத நிலையில் உள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொண்டன் சுப்பிரமணி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ஜெ.மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி  ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை ,   ஆணையத்தை முடிக்க உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது, ஆறுமுகசாமிஆணையம்  விசாரணையை மூன்று மாதங்களில் முடித்து, இறுதி அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது என்பது குறித்து, ஆறு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை  தள்ளிவைத்தது.