சென்னை: அதிமுக முன்னாள்அமைச்சர் காமராஜ் மீதான ஊழல் வழக்கு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். இவர், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, அப்போது, புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த முறைகேடு குறித்து 2018 ஆம் ஆண்டு புகார் அளித்ததாகவும், இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறை 2022-ம் ஆண்டு விரிவான விசாரணை நடந்து வருவதாக கூறியது. ஆனால், இதுபோன்ற லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின்படி ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதால் இந்த வழக்கில் உடனடியாக விசாரணையை முடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், இந்த புகார்கள் தொடர்பாக தற்போது விரிவான விசாரணை துவங்கி உள்ளதாகவும், அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளதாகவும் 31 டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்து உண்மையான இழப்பை கண்டறிய வேண்டி உள்ளது என்றும் விசாரணை முடியும் முன்பு மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுதாரர் அளித்த புகாரின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
[youtube-feed feed=1]