சென்னை:
ரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு விட்ட நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சமூக – பொருளாதார நிலையை கருதி, அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முந்தைய அதிமுக அரசு முடிவு செய்தது. அதன்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையை ஏற்று அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தது.

இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோன்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களும், இதே 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தங்களுக்கும் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு விசாரித்து வந்தது.

இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்ட நிலையில் இன்று இறுதித் தீர்பினை வழங்குகின்றனர்.