டில்லி:

துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட  11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் தொடரப்பபட்ட வழக்கு வரும் 7ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

கடந்த ஒராண்டாக கிடப்பில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி திமுக சார்பில் ஏற்கனவே பல முறை வலியுறுத்தப்பட்டு வந்தது. இன்று மீண்டும்  உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கை விரைந்த விசாரிக்க வேண்டும் என்றும், வரும் 7ந்தேதியாவது விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் கோரிக்கை வைத்தது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திமுகவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

இதன் காரணமாக பிப்ரவரி 7ந்தேதி ஓபிஎஸ் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெ. மறைவைத் தொடர்ந்து, எடப்பாடி தலைமையிலான அரசு சட்டமன்றத்தில் மெஜாரிட்டி வாக்கெடுப்பு நடைபெற்றபோது, அதிமுக கட்சி கொறடா அறிவிப்புக்கு மாறாக, ஓபிஎஸ்  உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேரும் வாக்களித்தனர்.

இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறை யீட்டு மனு மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில்,  வரும் 7ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நம்பப்படுகிறது.