கள்ளக்குறிச்சி: துணை ஆட்சியரின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில், துணைஆட்சியர் ராஜாமணி மற்றும் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியராகப் பதவி வகித்து வந்தவர் ராஜாமணி. இவர் சங்கராபுரம் அருகே ஒரு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது, சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவர் பயணித்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த 3 இரு சக்கர வாகனங்களில் மோதி அருகே உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாது.
இந்த விபத்தில், தனித்துணை ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரில் சென்ற ஓட்டுநர் உட்பட 3 பேருக்கும்… சாலை ஓரமாக நடந்து சென்ற பெண் குழந்தை உட்பட 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்ட அந்தப் பகுதி மக்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில், 11 வயதான சிறுமி மருத்துவமனைக்கு சென்றதுமே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த சங்கராபுரம் போலீஸார், விபத்துக்கான காரணம் என்ன? விபத்து எப்படி ஏற்பட்டது? உள்ளிட்ட பல்வேறு சந்தேக கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.