சென்னை: வேளாண் சட்டம் வாபஸ்காக அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் வெற்றி ஊர்வலம் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிலி, விவசாயிகளின் போராட்டத்தின்போது உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மாலை  சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் புறப்படும் என்றும் என்றும் அறிவித்து உள்ளார்.
கடந்த ஓராண்டு காலமாக தலைநகர்டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு வெற்றி கிட்டுகிற வகையில் மூன்று வேளாண் சட்டங்களை பா.ஜ.க. அரசு திரும்பப் பெற்றுள்ளது.  இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் வழிகாட்டுதலின்படி அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் வெற்றி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது.
விவசாயிகள் போராட்டத்தில் உயிர் நீத்த 700 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்துகின்ற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பாக அதன் தலைவர் திரு. எஸ். பவன்குமார் மற்றும் மத்தியசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சிவ ராஜசேகரன் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் இன்று (20.11.2021) சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் புறப்படும்.
இந்த ஊர்வலத்தில்  சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. கே.வீ. தங்கபாலு ஆகியோர் பங்கேற்கிறார்கள். முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பலர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.