சென்னை:
போராட்டம் நடத்திய 125 வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் மீது சென்னை ஐகோர்ட் கொண்டு வந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். நீதிமன்ற புறக்கணிப்பு போன்ற இரண்டு மாத காலமாக நடைபெற்ற போராட்டத்தால் நீதிமன்றப் பணிகள் வெகுவாக பாதிப்புக்குள்ளானது.
போராட்டத்தில் ஈடுபட்ட 125 வழக்கறிஞர்களை அகில இந்திய பார் கவுன்சில் தடை செய்தது. இதையடுத்து தமிழக வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அகில இந்திய பார் கவுன்சில் தலைவரை சந்தித்து விளக்க மளித்தனர். அவர்களின் வேண்டுகோள்படி போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
இதனையடுத்து, வழக்கறிஞர்கள் மீதான சட்ட திருத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஐகோர்ட் அறிவித்தது.
இந்நிலையில், தமிழக பார் கவுன்சிலின் பரிந்துரையை ஏற்று, 125 வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வதாக அகில இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது. தமிழக பார் கவுன்சில் தனது அறிக்கையில், நீதிமன்ற பணிகள் சுமூகமாக நடக்கிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களால் பிரச்னை ஏதுமில்லை எனக்கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.