டில்லி:

னடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 7 நாள் பயணமாக  இன்று இந்தியா வருகை தந்துள்ளார். அவர் தனது மனைவி மற்றும்  3 குழந்தைகளுடன் டில்லி வந்தார். அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்தியா வந்துள்ள கனடா பிரதமர், நாளை ஆக்ரா சென்று தாஜ்மஹாலை சுற்றி பார்க்க உள்ளனர். அதைத் தொடர்ந்து 19ந்தேதி குஜராத்தில் உள்ள ஆமதாபாத் செல்லும் அவர்  காந்திநகரில் உள்ள அக்ஷர்தாம் கோவிலுக்கு குடும்பத்துடன் செல்கிறார்.

அதைத்தொடர்ந்து,  ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொள்கிறார்.

வரும் 20ந்தேதி மும்பை செல்லும் கனடா பிரதமர் அங்கு இந்திய தொழிலதிபர்களை சந்தித்து உரையாடுகிறார். மேலும், திரைப்படத்துறையை சேர்ந்தவர்களையும் சந்தித்து பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21ந்தேதி பஞ்சாப் செல்லும் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்தினர், அங்குள்ள பொற்கோவிலுக்கு செல்கிறார்கள். பின்னர் 22ந்தேதி டில்லி திரும்பும் அவர்கள், டில்லியில் உள்ள ஜும்மா மசூதிக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து 23ந்தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாகவும், அப்போது இரு நாட்டு தலைவர்களிடையே  பாதுகாப்பு விவகாரம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை  குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.  அதைத்தொடர்ந்து  இருநாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்புத் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும்  24ம் தேதி டில்லியில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில்  மாணவர்கள் இடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரை நிகழ்த்தவுள்ளார்.

இன்று இந்தியா வந்துள்ள  கனடா பிரதமர் குடும்பத்தினருடன், அந்நாட்டு பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்களும் வந்துள்ளனர்.