டெல்லி:

மோடிஜி உங்கள் என்கிரிப்டட் வாட்ஸ்அப் தகவல்களை பார்க்கலமா? என்று சமூக ஆர்வலர்கள், சமூக வலைதள பயன்பாட்டாளர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.  தகவல் உரிமை சட்டம் திருத்த விதிகள் உருவாக்கப்பட்டு வருவது குறித்து வெளியாகும் தகவல்களை தொடர்ந்து, குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களால் தேவையற்ற பிரச்சினைகள், வன்முறைகள் எழுவதை தடுக்கும் வகையில், என்கிரிப்டட் தகவல்களையும் பார்வையிடும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டுள்ளது. இது பயனர்களின் உரிமையில் தலையிடுவதாகவும் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

பிரதமரே,  உங்களின் தனிப்பட்ட  சமூக வலைதள தகவல்களையும் பார்க்கலாமா? என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் உண்மைக்கு புறப்பான தகவல்கள் பகிரப்பட்டு வருவதும், இதனால் பல்வேறு இடங்களில் வன்முறைகளும் பரவி வருகின்றன. இதை தடுக்கும் வகையில் பல்வேறு சட்டப்பூர்வமான  நடவடிக்கைகள் மத்தியஅரசு எடுத்து வருகிறது.

அதுபோல,  வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் வதந்திகளை கண்டறிந்து, 24 மணி நேரத்தில் நீக்க வழி வகை செய்யும் வகையிலான சட்டம் 2018ம் ஆண்டு வரப்பட்டது. இதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்ட நிலை யில், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க பல்வேறு விதிமுறைகள் இருந்தாலும், பயங்கரவாதிகள் பயன்படுத்தி வரும் என்கிரிப்டட் வகையிலான தகவல்களை தடுக்கும் வகையில் மேலும் பல்வேறு விதிமுறைகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இதை தடுக்கும் நோக்கில், தற்போது என்கிரிப்டட் தகவல்களை உடைத்து பார்க்கும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய விதிகளையும் ஏற்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, சட்டவிரோத தகவல் அல்லது உள்ளடக்கத்திற்கான அணுகலை முன்கூட்டியே அடையாளம் காண அல்லது நீக்குவதற்கு அல்லது முடக்குவதற்கு பொருத்தமான கட்டுப்பாடுகளுடன் வழிமுறைகளை உருவாக்கப் பட்டு வருகிறது.

இதன்படி,  அனைத்து சட்டவிரோத என்கிரிப்டட் தகவல்களை வடிகட்டுதல் மற்றும்  “மறு-பதிவேற்றம் தடுப்பு” செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது.  அத்துடன், “சட்டவிரோதமானது” என்று அறிவிக்கப்பட்ட தகவல்கள் குறித்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள் சமூக வலைதள நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காலக்கெடுவும் விதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கு இந்த மாதம் இறுதியில் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, மத்தியஅரசு  தகவல் தொழில்நுட்ப இடைத்தரகர்கள் வழிகாட்டுதல்கள் (திருத்தம்) விதிகள், 2018ஐ சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் புதிய விதிகளின்படி, மறைக்கப்படும் என்கிரிப்டட் தகவல்களை கண்டுபிடிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியஅரசின் இந்த முடிவு. பெரிய சமூக ஊடக இடைத்தரகர்களுக்கும்,  சர்வதேச வணிக நிறுவனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று அதிர்ச்சி நிலவுகிறது.

அரசு, தனிமதனிதரின் உரிமையில் தலையிடுவதாக குற்றம் சாட்டும் நிறுவனங்கள்,  சமூக வலைதளங்களுக் கான புதிய வழிகாட்டுதல்கள், விவரங்கள் விதிகள் தொடர்பாக பகிரங்கமாக விவாதிக்கப்படவில்லை என்றும், இது  “சட்டவிரோதமானது”, ஆன்லைன் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் செயல் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

மத்தியஅரசின் இந்த நடவடிக்கை, பேச்சு சுதந்திரம் மற்றும் சாதாரண பயனர்களின் தனியுரிமை ஆகிய இரண்டிலும் அடிப்படை கேள்விகளை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக ஏற்கனவே கடந்த ஆண்டு (2019)  நவம்பர் 21ம் தேதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், சமூக ஊடகங்களுக்கான புதிய திருத்தப்பட்ட விதிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79 ன் கீழ், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள்) விதிகள், 2011 இல் குறிப்பிடப் பட்டுள்ளபடி சமூக ஊடக நிறுவனங்கள் சில விடாமுயற்சியுடன் பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு அரசாங்கங்கள் தொலைபேசிகளில் நுழைவதற்கு உளவு மென்பொருளைப் பயன் படுத்துவது பற்றிய வெளிப்பாடுகளுக்குப் பிறகு இந்தியா உள்பட ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் தனிப்பட்ட உரையாடல்களில் கண்காணிப்பு நடத்துவதாக குற்றம் சாட்டிய நிலையில், தற்போது சமூக வலைதளங்களின்  தனிநபர் உரிமையில் மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருவது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியஅரசின் புதிய விதிகளுக்கு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தனி மனித உரிமையில் தலையிடுவதாகும், இதுபோல பிரதமரின் வாட்ஸ்அப் தகவல்களையும் பார்க்க முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.