-ஏழுமலை வெங்கடேசன்
சிரிக்கவைப்பது என்பது அரிதான கலை..அதிலும் சிரித்தபடியே சிந்திக்கவைப்பது என்பது அபூர்வத்திலும் அபூர்வமாக கிடைக்கும் இயற்கையின் அருட்கொடை
nsk1
அப்படியொரு அதியச பிறவியாக வந்துபோனவர்தான் இவர். தமிழர்களின் பண்டைய கலைகளான, கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளை கையில் வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் அவர் நடத்திய சாகசங்கள் இன்றளவும் பிரமிக்கத்தக்கவையாகவே உள்ளன.
மூடநம்பிக்கைகளை சாடுவதில் உள்ள நாசூக்குத்தனம், எதிர்காலம் எத்தகைய வளர்ச்சிகளை பெறும் என்ற தீர்க்க தரிசன தொலைநோக்குப் பார்வை, கருத்தாழம் மிக்க பாடல்களை பாடி சாகாவரம் எய்தச்செய்ய திறமை…என இவரின் சாதனைகள் பெரிய பட்டியலில் போட்டாலும் மிதமிஞ்சி எட்டிப் பார்த்துக்கொண்டேயிருக்கும்..
1935ல் மேனகா படத்தில் திரை வாழ் தொடங்கிய இவர், டி.ஏ,மதுரம் என்ற இணை சேர்ந்தபின் பரிணமித்தவிதமே அலாதியானது.
1930 களிலும் சரி, 1940, 1950 களிலும் சரி.. தமிழ் படங்களில் சென்சார் சர்ட்டிபிகேட்டுக்கு அடுத்தபடி தவறாமல் இடம் பெற்ற ஒரே விஷயம் இந்த நகைச்சுவை ஜோடியின் காட்சிகள்தான்.
எம்கே தியாகராஜபாகவதர். பி.யூ.சின்னாப்பா, எம்.கே.ராதா, டி..ஆர், மகாலிங்கம், எம்.ஜிஆர், சிவாஜி என எந்த டாப் ஸ்டாராக இருந்தாலும் இவரின் நகைச்சுவை காட்சியை இடம் பெறவைக்க தனி ஆர்வம் காட்டினார்கள்.
இவரே தயாரித்து படம்பிடித்துவைத்திருக்கும் நகைச்சு வை காட்சிகளை வாங்கி அப்படியே தங்கள் படங்களில் தயாரிப்பாளர்கள் தனி டிராக்காக சேர்ப்பார்கள் என்றால், என்ன மாதிரியான திறமை இவருக்கிருக்கவேண்டும்..
nsk2
முதல்தேதி படத்தில் அவர் பாடிய பாடலான,,
”சம்பள தேதி ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் – கொண்டாட்டம்
இருபத்தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்,கொண்டாட்டம்
சினிமா ட்ராமா காட்சிகளுக்கு டிக்கட் கிடைக்காதொண்ணிலே
தியேட்டர் காலி ஆளிருக்காது தேதி இருபத்தொண்ணிலே
சிகரெட் பீடி வெற்றிலை பாக்கு விற்பனை அதிகம் ஒண்ணிலே
தெருவில் எறிந்த துண்டு பீடிக்கு கிராக்கி வந்திடும் இருபத்தொண்ணிலே…”
என்ற வரிகள் இன்றைக்கும் கேட்பவர்களின் நடுமண்டையில் நச்சென உளியை அடிக்கும்
தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி அந்த காலத்தில் ஒட்டுமொத்த அரசியல் பெருந்தலைவர்களும் மனப்பூர்வமாய் நேசித்த ஒரே கலைஞன் இவர்தான்..
கர்ணனின் கொடைத்தன்மையைகாலம் காலமாய் கேட்டுவளர்ந்த தமிழகத்தில், நிஜ வள்ளல் எப்படியிருப்பான் என்பதற்கு கண்முன் சாட்சியாக திகழ்ந்த நம்ப முடியாத ஒரு பிறவி..நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல அவதாரங்களை கண்டவர்.
சாகும்வரை அள்ளிஅள்ளி தந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 108வது பிறந்தநாள் இன்று