பிரதமர் மோடி அறிவித்துள்ள, “500,1000 ரூபாய் நோட்டு செல்லாது” என்ற அறிவிப்பை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். “ரண சிகிச்சை” என்று இந்த நடவடிக்கையை வர்ணிக்கும் வைகோ, “யாருக்கும் ஒண்ணும் பாதிப்பில்லை” என்று பேட்டியளித்துள்ளார்.

மோடி - வைகோ
மோடி – வைகோ

வைகோவின் இந்த ஆதரவு முடிவை ஏற்க இயலாமல், இம் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கோரி, ம.தி.மு.க.வின் வளைகுடா பொறுப்பாளர் வல்லம் பசீர், வைகோவுக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதம்..
திருமிகு, வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி திமுக .
பெரும்மதிப்பிற்குரிய பொதுச்செயலாளர் அவர்களுக்கு ,
வணக்கம் நலம் நலமே சூழ்க , மிகுந்த வேதனையோடு இந்த கடிதத்தை தங்களுக்கு வரைகிறேன் . இப்படி ஒரு சூழல் வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை இருபத்தி இரண்டு ஆண்டுகால மறுமலர்ச்சி பயணத்தில் எந்த இடத்திலும் உங்களோடு நான் முரண்படவில்லை . முதல் முறையாக உங்களோடு முரண்படுகிறேன் .
இதுவரை எந்த பொறுப்பையும் எனக்கு தாருங்கள் என்று உங்களிடம் நான் கேட்டதில்லை , உங்களோடு பயணிப்பதால் அரசியலில் அடையாளம் பெறமுடியும் என்ற எண்ணமும் எனக்கில்லை . எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்றுவரை உங்களோடு பயணிக்க ஒரே காரணம் மக்கள் நலன் என்ற ஒன்றை தவிர வேறு ஒன்றுமில்லை.
அந்த மக்கள் நலனுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்திய மக்கள் மீது பாரபட்சமின்றி பொருளாதார அடக்குமுறையை கட்டவிழ்த்திருக்கும் மோடியை நீங்கள் புகழ்ந்து பாராட்டியிருப்பது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது . மோடியின் இந்த பைத்தியக்கார நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழிக்கும் என்று நம்புகிற அளவிற்கு நீங்கள் அரசியல் அறியாதவறல்ல, இருந்தும் தொடர்ந்து இந்த நடவடிக்கையை நீங்கள் ஆதரிப்பது வேதனையளிக்கிறது .
ஐம்பதுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரை விட்ட நிலையில் துணை கண்டத்தின் ஒட்டு மொத்த சாமானிய மக்களும் பரதேசிகளாக வங்கியின் வாசலில் நிர்கதியாய் நிற்கும் சூழலில் மீண்டும் நீங்கள் மோடியின் இந்த அறிவிப்பு அடித்தட்டு மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறது Hat’s off to Modi என்று பேசியிருப்பது என்போன்றவர்களை வேதனையின் விளிம்பிற்கு தள்ளியிருக்கிறது..
வல்லம் பசீர்
வல்லம் பசீர்

பாஜக தவிர்த்த அனைத்து கட்சிகளும் மோடியின் இந்த கேவலமான அடாவடி நடவடிக்கையை ஓர் அணியில் நின்று எதிர்க்கும் நேரத்தில் நீங்கள் மட்டும் மோடியை பாராட்டுவது மக்கள் விரோத நடவடிக்கைக்கு துணைபோகும் செயலாகவே பொதுவானவர்களால் பார்க்கப்படுகிறது . உங்களின் ஆதரவு குரல் மோடியின் மக்கள் விரோத செயலுக்கு துணையாக இருக்குமேயன்றி கருப்பு பண ஒழிப்புக்கு ஆதரவு குரலாக இருக்காது .
கடந்த காலங்களில் எத்தனையோ தவறான முடிவுகளை எடுத்த நீங்கள் அதை தாமாகவே முன்வந்து ஒப்புக்கொண்டும் இருக்கிறீர்கள் . நீங்கள் எடுத்த தவறான முடிவுகளின் வரிசையில் இந்த முடிவும் இடம் பெற்றுவிடக்கூடாது என்று நினைக்கிறேன் . தயவுகூர்ந்து மோடியின் இந்த நிலைப்பாட்டில் நீங்கள் உடன்படக்கூடாது என்று சாமானியர்களில் ஒருவனாக நானும் எண்ணுகிறேன் .
நிச்சயம் நீங்கள் மோடியின் இந்த கையாலாகாத செயலை கண்டிப்பீர்கள் என்று நம்புகிறேன் . இந்த கடிதம் உங்களின் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் .
என்றும் உங்களோடு பயணிக்க விரும்பும் ஏகலைவன்
வல்லம் பசீர்.
(வைகோ ஆதரவாளர்கள் சிலர், இக்கடிதத்தை நீக்கச் சொன்னதை அடுத்து, பசீர், இக்கடிதத்தை நீக்கிவிட்டார். ஆனால் தற்போது இக்கடிதம் சமூகவலைதளங்களில் வைரலகிவருகிறது.)