மேட்டூர்:
மிமிக்ரி கலைஞர் உதவியுடன், அமைச்சர் பேசுவதாக கூறி அதிகாரிகள் இடம்மாற்றப்பட்டு செய்யப்பட்டுள்ளனர். இதில் கோடிகணக்கான ரூபாய் விளையாடி உள்ளது தெரியவந்துள்ளது.
‘மிமிக்ரி’ கலைஞர் மூலம், மின்துறை அமைச்சர் தங்கமணி போல பேசி பலபேரிடம் பணம் வாங்கிக்கொண்டு இடம் மாற்றம் செய்துவந்த ஆளுங்கட்சியினர் கண்டறிப்பட்டுள்ளனர்.
சேலம், மேட்டூரில், 840 மற்றும், 600 மெகாவாட் என இரண்டு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இங்கு பணியில் உள்ள அதிகாரிகள், பொறியாளர்கள் இடமாற்றம் வேண்டிய  ஆளுங்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகளை நாடுவது வழக்கம்.
அவர்கள் மூலம் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணி மாற்றம் நடைபெறும். சில நேரங்களில் அமைச்சர்களே பணி மாற்றத்துக்கு பரிந்துரைப்பதும் உண்டு.
இதுபோல் கடந்த மாதம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பணிபுரியும் உதவி பொறியாளர் ஒருவரை, நிலக்கரி கையாளும் பகுதியில் இருந்து பாய்லர்  பிரிவுக்கு மாற்ற வேண்டும் என அனல்மின் நிலைய அதிகாரிகளிடம் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி பேசுவது போல் ஒருவர் பேசியுள்ளார்.
இதனால், அமைச்சர் பேசியதாக நினைத்த அதிகாரிகள், அவர் குறிப்பிட்ட நபரை அவர் விரும்பும் பிரிவுக்கு மாற்றினர்.
இதில் ஏற்பட்ட குளறுபடி காலணமாக மாற்றப்பட்ட நபர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் அமைச்சர் தங்கமணியின் உறவினர் மூலம் அவரை சந்தித்து முறையிட்டனர்.
அப்போது, தாங்கள்தானே எனக்காக அதிகாரிகளிடம் போனில் பேசி மாற்றல் வாங்கி தந்தீர்கள்.. தற்போது ஏன் சஸ்பென்ட் செய்யப்பட்டேன் என்று கேட்டுள்ளார்.
mettur2
இதனால்  அதிர்ச்சியடைந்த மின்துறை அமைச்சர் தங்கமணி, ‘நானா போனில் பேசினேன்… நான் அங்கு யாரிமும் போனில் பேசவில்லையே’ என கூறினார்.
இதில் ஏதோ உள்குத்து நடந்திருப்பதை உணர்ந்த அமைச்சர் உடனடியாக அங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உள்ளார்.
அப்போதுதான், இது ஆளுங்கட்சியை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் இந்த தில்லுமுல்லு செய்திருப்பது தெரிய வந்தது.
திண்டுக்கல் அருகே உள்ள மிமிக்ரி கலைஞர் ஒருவரை வைத்து, அமைச்சர் போல பேசி, இதுவரை 28 பேருக்கு பணி மாற்றல் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக பல லட்சம் பணம் கை மாறியுள்ளதும் தெரியவந்துள்ளது.
மிமிக்ரி கலைஞர் தற்போது அமைச்சரின் கஸ்டடியில் இருக்கிறார். அவரிடம் விசாரித்ததில் இதுபோல பல முறை பேசியிருப்பதை ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே கடந்தமுறை அதிமுக ஆட்சியின்போது, தமிழக மின்துறை அமைச்சராக நத்தம் இருந்தேபோதே இதுபோல அமைச்சர் பேசுவதுபோல பேசி பலரை இடம்மாற்றம் செய்து வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதுகுறித்து போலீசில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும், அமைச்சரே ரகசிய விசாரணை யில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தெரியவருகிறது.
இதுபோல மற்ற துறைகளிலும் இடம்மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதா எனவும் ரகசிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.