சென்னை:

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு, பொதுச் சின்னமாக  குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.

டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். அதையடுத்து, அந்த சின்னத்தை ராசியாக எண்ணி, அதையே நாடாளுமன்ற தேர்தலிலும், சட்ட மன்ற இடைத்தேர்தலிலும் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது.

அதைத்தொடர்ந்து, தங்களது கட்சிக்கு  குக்கர் சின்னத்தை தங்களுக்கு பொதுச் சின்னமாக வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த விசாரணையின்போது,  தேர்தல் ஆணையம் தரப்பில் யாரும் ஆஜராகததால், வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த  வழக்கு மீண்டும் இன்று  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமை யிலான அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  அமமுகவுக்கு பொதுச் சின்னமாக குக்கரை தர முடியாது என கூறியது.

டிடிவி தினகரனின் அமமுக கட்சி  துவரை பதிவு செய்யப்படவில்லை என்பதை தெளிவு படுத்திய தேர்தல் ஆணையம், பதிவு செய்யப்படாத எந்தவொரு கட்சியையும் நாங்கள் கட்சியாக அங்கீ கரிக்க முடியாது, அதை ஒரு ஒரு குழுவாகத்தான் பார்ப்போம், அவர்களின் வேட்பாளர்களும் சுயேச்சைகள்தான்… எனவே அவர்களுக்கு பொது சின்னம் ஒதுக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதற்கு ஆதாரங்கள் ஏதும் உள்ளதாக என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தற்போது ஏதும் இல்லை என்று வழக்கறிஞர் கூறியதால், அதிருப்தி அடைந்த நீதிபதிகள், வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

நாளை காலை 10.30 மணிக்கு  இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம்  எழுத்துப்பூர்வமான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கில், நாளை விசாரணையை தொடர்ந்து தீர்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.