பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?

பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீற்றையும், ருத்ராட்சத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்?

நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்சம் அணிந்து கொள்கிறாள்!. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணிய வேண்டும்.

மேலும், சிவ மகாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

பெண்கள், தங்களுடைய தாலிக் (கொடியில்) கயிற்றில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துத்தான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்ற வற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே?

இவற்றைப் போல் ருத்ராட்சத்தையும் தாலிக் கயிற்றில் கோர்த்துக் கட்டிக்கொண்டு எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிந்து இருக்க வேண்டும். ருத்ராட்சம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல.  நமது  உயிரின் ஆன்மாவிற்காகவே நாம் அனைவரும் பிறவிப்பயன் அடைய வேண்டியே சிவபெருமானால் அருளப்பட்டது.