சென்னை: ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவையில் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

எடப்பாடி அரசின் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளில் முதல்வர் எடப்பாடி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில்  நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவலர்களைத் தாக்கியது, வாகனத்தை எரித்தது போன்ற வழக்குகளைத் தவிர மற்ற வழக்குகள் வாபஸ் பெறப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுமா என்பது குறித்து காவல் ஆணையர் விளக்கம் அளித்தார்.

சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் இருசக்கர வாகன பேரணி மற்றும் நடைபிரச்சாரம் நடைபெற்றது. இதனை, பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலை விபத்துக்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது, மேலும், ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் மூலம் எல்லா சிக்னல்களிலும் நவீன கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் அனுமதி இல்லாமல் பேரணி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

அதையடுத்து ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் குறித்து கருத்து தெரிவித்தவர்,.  குற்றங்களின் தீவிரம் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும்,  வழக்குப் பதிவு செய்யப்பட்ட விவரங்களும் கணக்கிடப்படுகிறது. ஜல்லிக்கட்டு தொடர்பான  வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு, முதல்வர் அறிவித்தபடி விரைவில் ஜல்லிக்கட்டு போராட்டம் வழக்குகள் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.