மதுரை: அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். மேலும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார் என புகழாரம் சூட்டினார்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மற்றும் வருமானம் தரும் கோவில்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான இடங்கள், நிலங்கள் தமிழ்நாடு அரசின்  அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான வருமானத்தை ஆன்மிகப் பணி மட்டுமின்றி பல்வேறு மற்ற பணிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல கோவில்கள் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கோவில்கள் அறநிலையத்துறையிடம் இருந்து மீட்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும் தமிழ்நாடு அரசு கோவில்களை நிர்வகிப்பதில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற  என் மண் என் மக்கள் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற அந்த நாள் இந்து அறநிலையத்துறையின் கடைசி நாள். ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்து அறநிலையத்துறை கலைக்கப்படும். ஸ்ரீரங்கம் கோவில் முன்னர் கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அதேபோல், இந்து கோவில்கள் நிர்வாகத்தை அந்தந்த கோவில் உடையதாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு இந்து அறநிலையத் துறையின் கீழ் கோவில்கள் நிர்வாகம் வரக்கூடாது என்பது பாஜகவின் கொள்கை முடிவுகளில் ஒன்றாக உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தே, அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்பதில்தான், ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்து அறநிலையத்துறை கலைக்கப்படும் என்றார்.

கோவில் முன் இருக்கும் கடவுள் மறுப்பாளர்கள் பெரியார் சிலை அகற்றப்படும் என்றும் கடவுளை நம்புபவன் முட்டாள் என சொல்லிய வரின் சிலைகள் அனைத்தும் அகற்றப்படும்.   நம்முடைய ஆழ்வார்களிலிருந்து, நாயன்மார்களிலிருந்து அவர்களுடைய சிலைகள் அங்கு வைக்கப் படும் என பேசியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம்  இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர், அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? என எதிர் கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழகஅரசின் கீழ் அறநிலையத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியவர்,  பெரிய கோவில்களின் வருவாயில் தான் சிறிய கோவில்கள் செயல்படுகின்றன என்றும், தற்போதைய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படு கிறார் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்கும் நாள், இந்து அறநிலையத்துறையின் கடைசி நாள்! அண்ணாமலை பேச்சு