பண்ருட்டி: 30 வருஷமா எதிர்த்த விசிகதான் என் கூட நிக்குது என உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் பண்ருட்டி தொகுதி வேட்பாளரும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவருமான வேல்முருகன் உருக்கமாக கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அதன்படி பண்ருட்டி தொகுதி கட்சி ஒதுக்கப்பட்டு, அதில் திமுக சின்னத்தில் போட்டியிட அறிவுறுத்தப்பட்டது. அங்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. இதனால், பலத்த போட்டி நிலவி வருகிறது.
வடமாநிலங்களில் பாமகவினருக்கும் (வன்னியர்களுக்கும்) விடுதலைசிறுத்தைகள் (தலித்) கட்சியினருக்கும் இடையே பல ஆண்டுகாலமாக மோதல் நீடித்து வருகிறது. ஆனால், இந்த தேர்தலில் வேல்முருகன் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், கூட்டணி கட்சியான விசிகவும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஒரே மேடையில், திருமாவளவன், வேல்முருகன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அந்த பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அப்போது உரையாற்றிய வேல்முருகன், பாமகவில் இருந்த போது நான் சிறுத்தையும், சிங்கமுமாக சண்டை போட்டுகொண்டு இருந்தேன். பாமகவில் நம்பர் 2வாக இருந்தேன். 30 வருடம் பாமகவில் உழைத்தேன். ஆனால் அதை எல்லாம் நினைத்து பார்க்காமல் பாமகவே என்னை இப்போது அழிக்க பார்க்கிறது. என்னை வளர விடாமல் தடுக்க பார்க்கிறது.
ஆனால், 30 வருடம் என்னை எதிரியாக பார்த்த விடுதலை சிறுத்தைகள்தான் இப்போது என் கூட இருக்கிறார்கள். வன்னியர்களே சிந்தியுங்கள்.. ஜாதி கடந்து நாம் இணைய வேண்டும். யாருக்கு எதிராக சண்டை போட்டேனோ அவர்கள்தான் எனக்காக இப்போது தேர்தல் வேலைகளை பார்க்கிறார்கள். 2 கிமீ தூரத்திற்கு மாலை தூவி என்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் வரவேற்றனர். கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, பாசமாக வரவேற்பு கொடுக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கொடுத்த வரவேற்பை பார்த்து கலங்கி போனேன்.
சொந்த சாதிக்காக வேலை செய்து, இவர்களை எதிர்த்தேன். ஆனால் இவர்கள்தான் இப்போது எனக்காக தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். 30 ஆண்டுகாலமாக இவர்களை எதிர்த்தேன். 30 வருஷமாக ஜாதி சண்டை போட்டோம். இனிமேல் ஜாதி சண்டை வேண்டாம். படிப்போம் எல்லோரும் படிப்போம். முன்னேறுவோம். வேலைக்கு போவோம். சண்டையை மறப்போம். பிரச்சனை வந்தால் பேசி தீர்ப்போம், வன்னியர்களும் , தலித் மக்களும் ஒன்றாக முன்னேற வேண்டிய நேரம் இது. முன்னேறுவோம், என்று வேல்முருகன் மிகவும் உருக்கமாக பேசினார். வேல்முருகன் பேச்சு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.