டில்லி :

சிஏஜி எனப்படும் கண்ட்ரொலர் அண்ட் ஆடிட் ஜெனரல் நிறுவனம் இன்று தாக்கல் செய்த அறிக்கையில் இந்தியன் ரெயில்வே வழங்கும் உணவு மனிதர்கள் சாப்பிட லாயக்கற்றவை என தெரிவித்துள்ளது.

இன்று பாராளுமன்றத்தில், ரெயில்வே கேட்டரிங்கால் வழங்கப்படும் உணவுகள் பற்றி சிஏஜி ஒரு அறிக்கை தாக்கல் செய்தது.  அதில் கூறப்பட்டுள்ளதாவது :

இந்திய ரெயில்வே கேட்டரிங் வழங்கும் உணவு, சுத்தம் செய்யப்படாத தண்ணீரில் செய்யப்படுகிறது.  ஈக்கள் மொய்ப்பதும், பூச்சிகள், எலிகள், கரப்பான்கள் ஆகியவை விழுந்ததாகவும் இருப்பது கண்கூடு.  சமையல் கூடங்களில் குப்பைத் தொட்டிகள் மூடி வைக்கப்படுவதில்லை.  சுற்றிலும் கழுவப்படாத பாத்திரங்களும், மிச்சம் மீதி உணவுகளும் சிதறிக் கிடக்கின்றன.  பல நேரங்களில் பழைய உணவுகளை சூடு செய்து அளிப்பதும் நடக்கிறது.  இவைகள் மனிதர்கள் சாப்பிட லாயக்கற்றவை.

அது மட்டும் அல்ல, நடைமேடைகளில் விற்கப்படும் குடிநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவை காலாவதி ஆனவை.  அடிக்கடி மாற்றப்படும் ரெயில்வே உணவுக் கொள்கைகளால் சீர்திருத்தம் ஏற்படாமல் சீர்கேடுகளே விளைகின்றன

என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய மந்திரி சுரேஷ் பிரபு சமீபத்தில் இந்திய ரெயில்வே உணவுக் கொள்கையை மாற்றி அமைத்தது தெரிந்ததே.

ரெயில்வே உணவுகள் மட்டுமின்றி ரெயிலின் உள்ளேயும், சுத்தம் என்பதே இருப்பதில்லை எனவும், ஷதாப்தி, ராஜதானி போன்ற ரெயில்களும் இதற்கு விதிவிலக்கில்லை எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்