பாட்னா

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது இஸ்லாமிய இளைஞரைக் கொன்றதாக இந்து அமைப்பினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட அமீர் ஹன்சியா

நாடெங்கும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்துத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  அவ்வகையில் கடந்த 21 ஆம் தேதியன்று பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி மாநில அடைப்புக்கு அழைப்பு விடுத்தது.  அப்போது நடந்த போராட்ட ஊர்வலத்தில் வன்முறை வெடித்ததால் காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

அந்த கூட்டத்தில் இஸ்லாமிய இளைஞரான அமீர் ஹன்சியா காணாமல் போனார்.  அவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.   கடந்த 31 ஆம் தேதி அன்று அமீர் பிணமாகக் கிடைத்தார்.  கடைசியாக அந்த போராட்டத்தில் அவர் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி கலந்துக் கொண்டுள்ளார்.   அவரைக் கொலை செய்ததாக தற்போது பீகார் காவல்துறையினர் 6 பேரைக் கைது செய்துள்ளது.

அந்த ஆறு பேரில் இந்து புத்திர சங்கத்தைச் சேர்ந்த நாகேஷ் சாம்ராட் மற்றும் இந்து சமாஜ் சங்கத்தை சேர்ந்த விகாஸ் குமார் ஆகிய இருவரும அடங்குவர்.   இந்த கைது குறித்து புல்வாரி ஷரிஃப் காவல் நிலைய அதிகாரி ரஃபிகுர் ரகுமான், “காவல்துறையினர் கூட்டத்தைக் கலைக்க முற்பட்டதை அடுத்து அமீர் ஹன்சியா அங்கிருந்து சென்றுள்ளார்.  அப்போது அவரை சிலர் சில இளைஞர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளதாகக் கண்டறியப்பட்டது.

அந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அமீரின் உடற்கூறு ஆய்வறிக்கையில் அவரை செங்கல் மற்றும் சில ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் அவர் மரணம் அடைந்தது தெரிய வந்தது.  அவருடைய தலையில் பெரிய காயம் இருந்தது.  அத்துடன் உடலில் இரு வெட்டுக் காயங்கள் இருந்தன.   அவருடைய வயிற்றினுள் உட்புற ரத்தப் போக்கு காரணமாக ஏராளமான ரத்தம் இருந்தது.” எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தீபக் மாதோ, சோட்டு மாதோ, ரயிஸ் பாஸ்வான் ஆகியோர் கூலிப்படையினர் எனத் தெரிய வந்துள்ளது.   அவர்களைக் கைது செய்து விசாரித்த போது அவர்கள் அமீர் உடல் இருந்த இடத்தை காட்டி உள்ளனர்.  அத்துடன் இந்த கொலையில் சாம்ராட் மற்றும் குமார் ஆகியோரின் தொடர்பையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.