டெல்லி: மத்தியஅரசு அமல்படுத்திஉ ள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  குடியுரிமை திருத்தச்சட்டம் மறைந்த மகாத்மா காந்தி அளித்த வாக்குறுதிதான் என்று  கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்து உள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில்,  காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளா உள்பட பல மாநிலங்கள்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கருத்து தெரிவித்த   கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியதாவது, “மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர். மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதாக உறுதியளித்தனர். இந்த வாக்குறுதி 1947-ல் வழங்கப்பட்டது. அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைச் சுற்றியுள்ள அரசியல் சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றவர்,  பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை சமூகத்தினரை கட்டாய மத மாற்றம் செய்கின்றனர். மேலும், கட்டாய திருமணம் செய்கின்றன. இதுகுறித்த செய்திகள் பல ஊடகங்களில் வருகின்றனர் என்று கூறினார்.