டில்லி

காதுகளில் ஹெட்ஃபோன் அணிந்ததால் ஒரு தாய் எச்சரிக்கை கொடுத்தும், கேளாமல் மகன் மீது கார் ஓட்டிக் கொன்ற பெண் கைது.

டில்லியின் பாலம் பகுதியில் வசிப்பவர் ப்ரீத்தி. இவரது ஒரே மகன் தீபக்.  கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று தீபக்கின் இரண்டாம் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடியுள்ளார் ப்ரீத்தி. இரு மாதங்களுக்கும் அந்த குழந்தையை பறி கொடுப்போம் என்பது அப்போது ப்ரீத்திக்கு தெரியவில்லை.

தீபக்

நேற்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் தன் தாய் ப்ரீத்தி அருகில் இருக்க, தீபக் விளையாடிக் கொண்டிருந்தான்.  அப்போது வேகமாக பின்னோக்கி வந்த கார் ஒன்று தீபக் மேல் மோதியது.  அதிர்ச்சி அடைந்த ப்ரீத்தி உடனே பெருங்குரல் எடுத்து கத்தியுள்ளார்.  அந்த காரை ஓட்டி வந்தவர் ஒரு பெண்.  தன் காதில் ஹெட்ஃபோன் மாட்டியிருந்ததால் அவருக்கு ப்ரீத்தியின் குரல் காதில் விழவில்லை.  காரில் சக்கரத்தின் அடியில் இருந்த தீபக்கை காப்பாற்ற கார் ஜன்னல் கண்ணாடிகளை வேகமாக தட்டி இருக்கிறார் ப்ரீத்தி.

அதுவும் அந்த பெண்ணின் கவனத்தை கவரவில்லை.  பின் காரை முன்பக்கமாக செலுத்தி வேகமாக சென்று விட்டார் அந்தப் பெண்.  தடுத்து நிறுத்தி ப்ரீத்தி அவரிடம் காரை ஓட்டி தன் மகனை காயப்படுத்தியதை சொன்னதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.  படுகாயம் அடைந்த மகனை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு ப்ரீத்தி எடுத்துச் சென்றுள்ளார்.  ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது, பின்பு டிடியு மருத்தவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தீபக் அங்கு இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

காரை ஓட்டிய பெண் சுமார் 25 வயது மதிக்கத்தக்கவர்.  அவரை போலிசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.  அவர் மேல் 304 ஏ மற்றும் 279 ஆம் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  ஆனால் அந்தப் பெண் ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.

போலீஸ் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றது.