விக்கிரவாண்டி:

மிழகத்தில் நடைபெற்ற 2 தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த வெற்றி, 2021 சட்டப்பேரவைக்கு தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டம் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 21ம் தேதி அன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்,  அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி உள்பட  12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அங்கு அதிமுக, திமுகவுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது. வாக்குப்பதிவும்  84.41 சதவீதம் பதிவானது.

இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கம்  முதலே, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்து வந்தார். 20 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், முத்தமிழ்ச்செல்வன் 1,13,428 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தி 68,646 வாக்குகள் மட்டுமே பெற்றதால், 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் முத்தமிழ்ச்செல்வன் அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம், இடைத்தேர்தலில் மக்கள் தெளிவான மனநிலையில் சரியான தீர்ப்பை அளித்துள்ளார்கள். இந்த வெற்றியானது  2021 சட்டப்பேரவைக்கு தேர்தலுக்கு முன்னோட்டமான  வெற்றியாக அமையும் என்று கூறினார்.