எல் இ சி ஏஜண்டால் வெளிவந்த கும்பமேளா கொரோனா பரிசோதனை ஊழல்

Must read

ரித்வார்

டந்து முடிந்த கும்பமேளாவில் பல போலி கொரோனா பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்டது வெளிவந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 1 முதல் 30-ம் தேதி வரை உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார், டேராடூன், தெஹ்ரி உள்ளிட்ட பகுதிகளில் பிரசித்தி பெற்ற கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்றது.  அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கங்கையில் புனித நீராடினர்.  அப்போது உத்தராகண்ட் முழுவதும் கொரோனா தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியது.

அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவல் இருக்கும் போது, கும்பமேளாவுக்கு அனுமதி கொடுத்ததற்காக மத்திய, மாநில அரசுகள் மீது பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. இதனால் கும்பமேளா நடைபெறும் பகுதிகளில் கொரோனா சோதனை மேற்கொள்வதற்காக 24 தனியார் ஆய்வகங்கள் பணியமர்த்தப்பட்டன. இதில் 14 ஆய்வகங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், 10 ஆய்வகங்கள் கும்பமேளா நிர்வாகம் சார்பிலும் நியமிக்கப்பட்டன.

கோடிக்கணக்கிலான பணம் ஆய்வகங்களுக்கு வழங்கப்பட்டன. ஆய்வகங்கள் நடத்திய சோதனையில், தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று இருப்பதாக முடிவுகள் வந்தன.

இந்த கும்பமேளாவில் பங்கேற்காத பஞ்சாபைச் சேர்ந்த எல் ஐ சி முகவர் ஒருவருக்கு சில மாதங்களுக்கு முன்பு எஸ்எம்எஸ் ஒன்று வந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்த ஒரு தனியார் ஆய்வகம் அனுப்பியிருந்த அந்த குறுந்தகவலில், கொரோனா பரிசோதனைக்காக உங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் இந்த குறுந்தகவலை அவர் சமீபத்தில்தான் பார்த்துள்ளார்.

அவர் இதுகுறித்து இந்திய மருந்துவ ஆராய்ச்சிக் குழுவிடம் (ஐசிஎம்ஆர்) புகார் அளித்தார். ஐசிஎம்ஆர் அதிகாரி நடத்திய முதல்கட்ட விசாரணையில், அந்தக் குறிப்பிட்ட ஆய்வகத்தில் இருந்து ஏராளமான போலி கொரோனா முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஆய்வகம் மட்டுமின்றி, கும்பமேளாவின் போது கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்திய மற்ற ஆய்வகங்களின் அறிக்கைகள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தராகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணைக்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவினர் இன்னும், 15 தினங்களுக்குள் அவர்கள் தங்களின் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More articles

Latest article