சென்னை:

சென்னையிலிருந்து அண்டை மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் இன்று (07.05.2020) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்ற அறிவிப்பும் வெளியானது. இதனால் சென்னையிலிருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற அண்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று மது வாங்குவதற்கான வாய்ப்புகள் இருந்து வந்தன.இந்த நிலையில் சென்னையிலிருந்து அண்டை மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் எச்சரித்துள்ளார்.

மேலும், வசிப்பிட அடையாள அட்டை காண்பித்து அருகாமையில் உள்ள கடைகளில் மது வாங்கலாம், கடைக்கு சம்பந்தமில்லாத நபர் வந்து மது வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.