சென்னை: தொழிலதிபர் கடத்தல் வழக்கில் 7 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சரவணனிடம், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை  பண்ணை வீட்டில் கட்டிப்போட்டு அவருடைய சொத்துகளை ஒரு கும்பல் காவல்துறையினர் உதவியுடன் எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இதில்,  திருமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து சிபிசிஐடி நடத்திய விசாரணையில், இந்த வழக்கு தொடர்பாக, திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட திருமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் 10 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட  காவலர்கள் அனைவரும் தலைமறைவாகினர். பின்னர் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா மற்றும் சங்கர் ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்து வந்த காவல்துறை முன்னாள் ஆய்வாளர் சரவணனன் 7 மாத தேடுதலுக்கு பிறக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரை  காவல் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின்போது, கடத்தல் பின்னணி குறித்த முழுமையான தகவல்கள் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது. இது திருமங்கலம் காவலர்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.