டில்லி

கடந்த 2009 க்குப் பிறகு சென்ற மாதம் மீண்டும் இந்திய வர்த்தகம் பெருமளவு குறைந்துள்ளது.

இந்தியாவின் முக்கிய வர்த்தகம் விவசாயப் பொருட்கள் ஆகும். இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைவு, மழை இன்மையால் நீர் பஞ்சம், மற்றும் பொருளாதார கட்டுப்பாடு உள்ளிட்டவைகள் விவசாயத்தை பாதிக்கும் இனங்களாகும். இந்திய விளைநிலங்களில் 55% க்கு மேல் வானம் பார்த்த பூமி ஆகும். எனவே மழை பொய்க்கும் போது விவசாய பொருட்கள் விளைச்சலும் தடை படும்.

ஐஎச்எஸ் மார்கிட் என்னும் ஒரு வர்த்தக ஆய்வு நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அந்த ஆய்வு முடிவில், “நாடெங்கும் வர்த்தகம் மிகவும்குறைந்துள்ளது. குறிப்பாக தனியார் நிறுவனங்களில் கடந்த பிப்ரவரி மாதம் வர்த்தகம் +18% இருந்த நிலையில் சென்ற மாதம் அதாவது ஜூன் மாதம் +15% ஆக குறைந்துள்ளது. கடந்த 2009 முதல் உள்ள விவரங்களை காணும் போது இது மிகவும் குறைவு ஆகும்.

இதற்கு இடையில் 2016 ஆம் ஆண்டு பருவமழை பொய்த்த போது இவ்வாறு வர்த்தகக் குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த 7% விட சற்று குறைந்து 6.8% ஆக இருந்துள்ளது. அடுத்த படியாக இந்த வருடம் பருவ மழை மிகவும் குறைவாக பெய்துள்ளது. இதனால் கோடைக்கால பயிர்கள் உற்பத்தி அடியோடு குறைந்துள்ளது.

முக்கியமாக இந்திய ரூபாய் மதிப்பு பெருமளவில் சரிந்து வருகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் விலை கொடுக்க வேண்டி உள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையை வர்த்தகப் போட்டி காரணமாக உயர்த்த முடியாத நிலை உள்ளது. அது மட்டுமின்றி தொழிலாளர் குறைவு, வரி விகித அதிகரிப்பு உள்ளிட்டவைகளும் வர்த்தகத்தில் கடும் பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.