சென்னை,

திய ஒப்பந்தம் குறித்து நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நேற்று இரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 2வது நாளாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கி  உள்ளது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 47 தொழிற்சங்கங்களுடன் ஏற்கனவே பல முறை பேச்சு வார்த்தை நடைபெற்றும் முடிவுகள் எட்டப்படாமலேயே உள்ளது.

இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலவை தொகையை அரசு கூறியதுபோல உடனே வழங்கவேண்டும் என கூறியது.

இதுவரை,  சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் 11 முறையும், சென்னை பல்லவன் இல்லம், தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் 10 முறையும் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிவுகள் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.

இந்த சூழ்நிலையில்,நேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் 47 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுத்துக்கொண்டே சென்றது. இதன் காரணமாக போக்குவரத்து தொழிலாளர்கள் டென்ஷனாகவே இருந்து வந்தனர்.

இந்த நிலையில் அமைச்சருடன், தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டதாக பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மத்தியில் நேற்று மாலை  தகவல் பரவியது.

இதனால்  பெரும்பாலான டிரைவர்கள் மாலை 6.30 மணிக்கு மேல் பஸ்களை இயக்க மறுத்துவிட்டனர். கோயம்பேடு, பாரிமுனை, வடபழனி, எண்ணூர் உள்பட அனைத்து பஸ் நிலையங்களிலும், பஸ்கள் இயக்கப்படாமல் அணிவகுத்து நின்றன. பஸ்சில் ஏறிய பயணிகளிடம், பஸ்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் இரவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது  அமைச்சர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.  இந்த ஒப்பந்தத்தை அ.தி.மு.க. உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.

ஆனால், தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன.

அதைத்தொடர்ந்து,  தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்க நிர்வாகிகள்  ‘ஸ்டிரைக்’ அறிவிப்பை நேற்று இரவு 8 மணியளவில் வெளியிட்டனர்.  இதையடுத்து இயக்கப்பட்ட ஒரு சில பஸ்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியவர்கள் , குறிப்பாக பெண்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

வெளியூர் செல்லும் பெரும்பாலான பஸ்களும் இரவில் இருந்து நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி பஸ்சில் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் பலருக்கு ஏற்பட்டது.

பஸ் டிரைவர்கள் போராட்டத்தால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கையாக அனைத்து போக்குவரத்து அலுவலகங்களிலும்  போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தொடர்ந்து 2வது நாளாக பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒருசில பஸ்கள் மட்டுமே அவ்வப்போது வந்து செல்கிறது. இதன் காரணமாக இன்று காலை முதலே பஸ் நிலையங்களில் பயணிகள் பரிதவித்து  வருகின்றனர். வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் போன்றோர் பஸ் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.

இதன் காரணமாக  பெரும்பாலான பயணிகள்  ஷேர் ஆட்டோ மூலம் அருகிலுள்ள ரெயில் நிலையங்களுக்கு சென்று ரெயிலை பிடித்து செல்கின்றனர். இதனால் அனைத்து ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பஸ் நிலையங்கள், போக்குவரத்து பணிமனைகள் பல்லவன் இல்லம் போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகம் – கேரள எல்லையிலும் போக்குவரத்து நிறுத்தம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி கேரள பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.