சென்னை: திருவாரூரில் 3 அரசு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்த பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது.
என்ஐஏ சோதனையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல இடங்களில் பிஎஃப்ஐ அமைப்பினர் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் பெட்ரோல் குண்டு வீசியும், பேருந்து வாகனங்களை உடைத்தும், தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். கடந்த 23ந்தேதி அன்று திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மன்னார்குடி செல்வதற்காக பேருந்து, மற்றும் மயிலாடுதுறை பேருந்துமீது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், மூன்று அரசு பேருந்து கண்ணாடியில் கற்களை எரிந்து சேதப்படுத்தி உள்ளனர். இதில் அந்த பேருந்தின் பின்பக்க கண்ணாடி முழுமையாக உடைந்து நொறுங்கியது.
இது பொதுமக்களிடையே கடுமையான அதிர்ச்சியையும், காவல்துறையினர் மீதான அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் புதிய பேருந்து நிலையத்தின் ஒரு கடையில் இருந்த சிசிடிவி கேமிராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தார். மொத்தம் மூன்று வண்டிகளில் வந்த ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க லாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் அரசு பேருந்து தாக்கிய மர்மநபர்கள் யார் எதற்காக தாக்கினார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், திருவாரூரில் அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அதன்படி, திருவாரூர் கொடிக்கால்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த 35 வயதான சாகுல் ஹமீது திருவாரூர் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஹாஜாநிவாஸ், கொடிக்கால் பாளையத்தை சேர்ந்த முகமது மகசூன் மஹதீர் மற்றும் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த 28 வயதான அஹமதுல்லா ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் இந்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.