சென்னை:

மிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையில் எதிர்க்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் கொளத்தூர் தொகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின், பீட்டர் அல்போன்ஸ், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், முன்னாள் சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்பட  சாலை மறியலில் ஈடுபட்ட கூட்டணி கட்சியினரும்  கைது செய்யப்பட்டனர்.

தமிழக அரசு கடந்த 19-ம் தேதி இரவு திடீரென  பேருந்துக் கட்ட ணத்தை உயர்த்தியது.  இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிக எதிர்க்கட்சிகளும் கட்டண உயர்வை, தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதையடுத்து பேருந்து கட்டணத்தை சிறிது குறைத்து அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று அனைத்துக்கட்சி தலைவர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை  சென்னை கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அவருடன்  காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எர்ணா வூர் நாராயணன்  உள்பட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்குபெற்றனர். அவர்களை போலீசார் கைது செய்து அருகிலுள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

அதுபோல சென்னை சைதாப்பேட்டையில் வைகோ, திருமாளவன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்  ஆகியோர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை கைது செய்தது.

காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் உள்பட தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் ஊர்வலமாக வந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் இன்று பஸ் கட்டண உயர்வை எதிர்த்து கோ‌ஷமிட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சேத்துப்பட்டு மேயர் ராதாகிருஷ்ணன் சாலையில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் தலைமை யில் மறியல் போராட்டம் நடந்தது. அவர்களை கைது செய்து அருகிலுள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டளனர்.

தியாகராய நகரில் தி.மு.க. பகுதி செயலாளர் ஜெ. கருணாநிதி தலைமையில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் தி.நகர் ஸ்ரீராம் முன்னிலையில்  தியாகராய நகர் பஸ் நிலையம் முன்பு ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பூர் மாநகர் போக்குவரத்துக் கழக பணி மனை முன்பு தி.மு.க. பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை யில் மறியல் போராட்டம் நடந்தது. காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஓட்டேரி தமிழ்செல்வன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ரஞ்சித்குமார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பகுதி தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு பெரம்பூர் ரெயில்வே திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

சென்னை கொளத்தூர் பகுதியில் ஸ்டாலின் தலைமமையில் நடைபெற்ற போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடை பட்டது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பெரம்பூர் அருகே உள்ள அகரம் பெரவள்ளூர் சந்திப்பில் போராட்டம் நடத்திய திமுக கூட்டணி கட்சியினர்,  மூலக்கொத்தளம் நோக்கி சென்று கொண்டிருந்த அரச  பஸ்சை மறித்து அதில் ஏறியும்,  சாலையில் அமர்ந்தும் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களுடன் கட்சி கொடிகளுடன், அரசுக்கும், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராகவும் கோஷம் போட்டனர்.

இதன் காரணமாக பெரவள்ளுர் சாலை முழுவதும்  வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஏற்கனவே சிறிய சாலையாகையால்,  போக்குவரத்து வெகுநேரம் தடைபட்டது. திமுகவினர் போராட்டம் நடத்திவிட்டு சென்று விட்ட நிலையிலும், போக்குவரத்து சீராக பல மணி நேரம் ஆனது.

கைதுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின் ‘போராட்டம் தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.