திருச்சி அருகே உள்ள விராலிமலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்து டிரைவர் பலியானார். 30 பயணிகள் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்றிரவு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. அதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்தை நெல்லை சீவலப்பேரியை சேர்ந்த டிரைவர் முருகன் ஓட்டினார். அதிகாலை 4 மணியளவில் திருச்சி அருகே உள்ள விராலிமலை குறிச்சிப்பிரிவு நான்குவழிச்சாலை பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது, நிலைதடுமாறியதில் லாரியின் பின்பக்கம் வேகமாக பேருந்து மோதியது.
இதில் தாறுமாறாக ஓடிய பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்து டிரைவர் முருகன் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். பேருந்தில் பயணித்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை காவல் ஆய்வாளர் மதன் தலைமையிலான காவலர்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்தோடு, இது குறித்து விராலிமலை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலை நடந்த இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.