இந்திரா காந்தி சுடப்பட்ட போது அவரை பாதுகாக்க யாராவது முயற்சி செய்திருந்தாலோ அல்லது அந்த இடத்தில் இருந்து அவரை இழுத்துச் சென்றிருந்தாலோ அவரது மரணம் இவ்வளவு மோசமானதாக இருந்திருக்காது என்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சரமாரியாக சுடப்பட்டு இறந்தார்.
எந்திர துப்பாக்கிகளின் தோட்டாக்கள் அவரது உடலை சல்லடையாக துளைத்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திரா காந்தியை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அன்றைய தினம் அவரது உயிரை காப்பாற்றப் போராடிய மருத்துவர்களுள் ஒருவரான இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. வேணுகோபால் தான் எழுதிய “இதயபூர்வமான : இருதய அறுவை சிகிச்சை நிபுணரின் முன்னோடி பயணம்” (“Heartfelt: A Cardiac Surgeon’s Pioneering Journey”) என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இருதய அறுவை சிகிச்சை நிபுணராக தனது 40 ஆண்டுகால அனுபவத்தை புத்தகமாக வெளியிட்டுள்ள டாக்டர் பி. வேணுகோபால், இந்தியாவில் முதல் முறையாக 1994 ம் ஆண்டு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திரா காந்தி சுடப்பட்ட அக்டோபர் 31 ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் பொறுப்பில் இருந்து டாக்டர் எச்டி டாண்டன் ஓய்வு பெற இருந்தநிலையில் அவரை அடுத்து டாக்டர் சினே பார்கவா இயக்குனராக பொறுப்பேற்க இருந்தார் என்று குறிப்பிட்டுள்ள வேணுகோபால், ஓய்வு பெறும் வேளையில் ஒருவரும் பதவியேற்கும் மனநிலையில் ஒருவரும் இதுபோன்ற ஒரு இக்கட்டான தருணத்தில் என்ன செய்வதென்றே சிறிது நேரம் குழப்பத்தில் இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழக்கமாக இருதய அறுவை சிகிச்சைக்கு தன்னுடன் ஆலோசிக்கும் இவர்கள் இந்திரா காந்தி விஷயத்திலும் தன்னிடம் ஆலோசனை நடத்தியதாகவும், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர்கள் அவரது உடலில் இருந்து மிகவும் அரிய O-நெகட்டிவ் வகை ரத்தம் வெளியேறுவதை தடுக்கமுடியாமல் போராடி வந்த நிலையில், அவரது ரத்த நாளங்களை சீர் செய்யமுடியுமா என்று முயற்சிக்க உடனடியாக அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்ற ஆலோசனை கூறினேன்.
மொத்தம் 33 தோட்டாக்கள் அவரை நோக்கி பாய்ந்திருந்தது அவரது சேலையில் இருந்து விழுந்த தோட்டாக்கள் தரையில் சிதறின. 30 தோட்டாக்கள் அவரது உடலை பதம் பார்த்திருந்தது அதில் 23 குண்டுகள் அவரது உடலை துளைத்துச் சென்றிருந்தது 7 தோட்டாக்கள் அவரது உடலிலேயே இருந்தது.
இந்திரா காந்திக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக எந்தவித ஒப்புதல் கையெழுத்துக்கும் காத்திருக்காமல் அவரது உடலில் இருந்து ரத்தம் வெளியேறுவதைத் தடுத்து அவரது உயிரைக் காப்பாற்றப் போராடிய அந்த நான்கு மணி நேரத்தில் மூன்று முறை ரத்தம் தோய்ந்த எனது உடைமைகளை மாற்றவேண்டி இருந்தது என்று டாக்டர் பி வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திரா காந்தி சுடப்பட்ட போது அவரை பாதுகாக்க யாராவது முயற்சி செய்திருந்தாலோ அல்லது அந்த இடத்தில் இருந்து அவரை இழுத்துச் செல்ல முயற்சி செய்திருந்தாலோ இந்தளவுக்கு ரத்தம் வெளியேறி இருக்காது என்றும் அவரது மரணம் இவ்வளவு மோசமானதாக இருந்திருக்காது என்றும் அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவரை காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்த நிலையிலும் வெளிமாநிலத்தில் பயணம் மேற்கொண்டிருந்த அவரது மகன் ராஜீவ் காந்தி வரும் வரையில் எங்களது முயற்சியை கைவிடவில்லை.
ஒருபக்கம் இந்திரா காந்தியின் உயிரைக் காப்பாற்ற போராட்டம் நடந்து கொண்டிருக்க மருத்துவமனையின் வராண்டாவில் அடுத்த பிரதமர் குறித்தும் வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி ஜெயில் சிங் இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்றும் பொறுப்பில் இருந்த துணை ஜனாதிபதி வெங்கட்ராமனிடம் ஆலோசிப்பது குறித்தும் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
50,000க்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ள 81 வயதான மருத்துவர் வேணுகோபால், “இந்திரா காந்தி உடலில் இருந்து அரிதான O-நெகட்டிவ் வகை இரத்தம் நிற்காமல் வெளியேறியதும் அதை சரிசெய்ய முடியாமல் மருத்துவர்கள் போராடியதும் நான் பார்த்ததிலேயே வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத மிகவும் குழப்பமான சூழல்” என்று அந்த புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.