மும்பை

மும்பை – அகமதாபாத் இடையே அமைக்கப்பட உள்ள புல்லட் ரெயில் மழைக்காலங்களில் இயங்காது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடியின் கனவுத் திட்டம் என கூறப்படும் புல்லட் ரெயில் திட்டம் மும்பை – அகமதாபாத் இடையே அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்டது.   சுமார் 500 கிமீ தூரமுள்ள இந்த ரெயில் பாதை திட்டத்திற்கான வடிவமைப்பில் தற்போது 80% முடிந்துள்ளது.   இந்த ரெயில் சுமார் மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் மழைக்காலங்களில் கடும் மழை பெய்வது வழக்கம்.   கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி மும்பையில் 12 மணி நேரத்தில் 418 மிமீ மழை பெய்தது.    இதனால் மும்பை நகர்ப்புற பேருந்துகளும் ரெயிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.    இதனால் மழைக்காலங்களில் அதிவேக ரெயிலான புல்லட் ரெயில் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.  “பாதுகாப்பு கருதி புல்லட் ரெயில் இயற்கை சீற்றத்தின் போது வேகம் தானாகவே குறையும் படியும்,  அல்லது தானாகவே நின்று விடும் படியும் அமைக்க உள்ளது.   அதன்படி மழையின் அளவு மணிக்கு 50 மிமீ அல்லது 24 மணி நேரத்தில் 400 மிமீக்கு மேல் அதிகரிக்கும் போது புல்லட் ரெயில் தானாகவே நின்று விடும்.

இவ்வாறு நிற்பது படிப்படியாக நடக்கும்.  ஒரு மணி நேரத்தில் 40 மிமீ மழை பெய்யும் போது ரெயிலின் வேகம் மணிக்கு 160 கிமீ ஆக குறையும்.  அதுவே 45 மிமீ மழை என்றால் வேகம் 70 கிமீ ஆக மேலும் குறையும்.   50 மீமி மழையில் ரெயில் முழுவதுமாக நின்று விடும்.  இதற்காக இந்த ரெயில் தடத்தில் 6 இடங்களில் மழை மானி பொருத்தப் பட உள்ளது.

அத்துடன் நிலநடுக்கம் ஏற்படும் போது வேகம் குறைய ஆரம்பித்து புல்லட் ரெயில் 5 நிமிடங்களில் முழுவதுமாக நின்று விடும்.   இதற்காகவும் பல இடங்களில் நிலநடுக்கம் அளவு கருவிகள் பொருத்தப்பட உள்ளது.   அது மட்டுமின்றி காற்றின் வேகம் மணிக்கு 320 கிமீ க்கு மேல் அதிகரிக்கும் போது புல்லட் ரெயில் 5.5 நிமிடங்களில் வேகம் படிப்படியாக குறைந்து நின்று விடும்” என அந்த முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.