சென்னை: தமிழக தலைநகரின் உள்புற மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்சேபத்திற்குரிய இடங்களில் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை இடிப்பதற்காக அடையாளம் காணும் பணி விரைவில் துவங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஆட்சேபத்திற்குரிய புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு இடிக்கப்படும். அதேசமயம், முறையான பட்டா ஆவணங்கள் இல்லாமல் கட்டப்பட்டு, ஆட்சேபத்திற்குரிய இடங்களில் அமையாத கட்டடங்கள் இடிக்கப்படாது என்றும், அதேசமயம் ஒழுங்குமுறையின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில், ஆட்சேபத்திற்குரிய இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் சுமார் 1 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த அடையாளம் காணும் பணி இன்னும் முடியவில்லை என்றும், ஆனால் ஒருவாரத்தில் அந்தப் பணி முடிவடையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கிராமங்களில், ஆட்சேபத்திற்குரிய இடங்களில் கட்டப்பட்டதாக, மொத்தமாக 5000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாய் கூறப்படுகிறது.