சென்னை: மோடி-ஜின் பிங் கலந்துரையாடல் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற போது திபெத்தியர்கள் சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்துவர் என எதிர்பார்க்கப்பட்டது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திபெத்திய மாணவர்கள் மற்றும் ஏனையோரை முன்கூட்டியே தேடித் தேடிப் பிடித்து காவலில் வைத்தது சென்னைக் காவல்துறை, அப்படியும் திடீர் திடீரென ஆங்காங்கே எதிர்பாராத நேரத்தில் திபெத்தியர்கள் வெளிப்பட்டு எதிர்ப்பு கோஷமிட்டனர்.

சென்னை காவல்துறையும் மிகத் தீவிரமாக எவர்களெல்லாம் சந்தேகத்திற்கிடமானவர்களோ அவர்களைப் பிடித்து காவலில் வைத்தனர். ஆனால், முக ஒற்றுமை ஒன்று போலிருப்பதால் வடகிழக்கிலிருந்து வந்தவர்கள் இந்நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அன்றாடப் பணிகளுக்காக நடமாடிக் கொண்டிருந்த பலரை காலை முதல் மாலை வரை காவல் நிலையத்தில் முடக்கி வைத்தது பெரும் மன உளைச்சலுக்குக் காரணமானதாகப் பலரும் கூறினர்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் கூறியதாவது, “நான் ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, தொழில் அடையாளச் சான்று என அத்தனையும் கைவசம் வைத்திருந்தேன். ஆனாலும் அவை எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. பின் அவைகள் எதற்குத்தான் உள்ளன?“ என்றார்.

மேலும் அவர், சொந்த நாட்டிலேயே வேறுநாட்டில் இருப்பது போன்ற உணர்வை அடைந்ததாகவும் கூறினார்.