புது சட்டம் வருது: இனி தைரியமா வீடு வாங்கலாம்

Must read

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ரியல் எஸ்டேட் கட்டுப்பாட்டு சட்டத்தில், கட்டுமான நிறுவனம் வீட்டை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டிய ஒப்பந்த தேதியில் ஒப்படைக்காமல் தாமதித்தால் 10.9 சதவிகிதத்தை வட்டியாக வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டும். மேலும் வீட்டை ஒப்படைக்கும் தேதியை பத்திர பதிவின்போதே தெரிவித்துவிட வேண்டும் போன்ற புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இச்சட்டம் மூலம் வீடு வாங்குவோரின் நலன் பாதுகாக்கப்படும் என்று தெரிகிறது.

real_estate

இச்சட்டத்தின்படி, ஒருவேளை வாடிக்கையாளர் பணத்தை திரும்பத் தரக் கோரினால் முழுபணத்தையும் கட்டுமான நிறுவனம் 45 நாட்களுக்குள் திருப்பித் தரவேண்டும். கட்டுமானத்துறையை கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்படுத்தப்படும். இது இத்துறையின் திட்டங்களை விரைவாக குறித்த நேரத்தில் முடிக்க வழிவகை செய்யும். மேலும் கட்டுமான நிறுவனம் வாடிக்கையாளர் அளித்த தொகையில் 70% பணத்தை தனி வங்கிக்கணக்கில் போட்டு வைக்க வேண்டும். இத்தொகை கட்டுமான செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப் படவேண்டும்.
இந்த புது சட்டம் வாடிக்கையாளரது பணத்தின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. சில நேரங்ளில் கட்டுமான நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் பெற்ற பணத்தை வேறு திட்டங்களுக்கு மாற்றி செலவழித்து வாடிக்கையாளரை ஏமாற்றக்கூடும் என்பதால் இந்த புது சட்டம் மூலம் அரசு கட்டுமான நிறுவனங்களுக்கு இந்த புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதற்கு முன் இப்படி ஏமாந்த வாடிக்கையாளர்கள் தங்கள் வீடு முடிக்கப்பட 10 வருடங்கள்கூட காத்திருந்த வரலாறுகள் உண்டு.
கட்டுமான நிறுவனத்துடன் இதுபோன்ற ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், இது பற்றி ஒழுங்குமுறை ஆணையத்திடம் வாடிக்கையாளர் புகார் அளிக்கலாம். எந்த வழக்கையும் விசாரித்து 60 நாட்களுக்குள் முடித்து தீர்வு தரும்படி ஒழுங்குமுறை ஆணையம் அரசால் பணிக்கப்பட்டிருக்கிறது.
தாமதமாக செலுத்தப்படும் பணத்துக்கு 10.9% வட்டியை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும். இதற்கு முன்பாக அவர்கள் 15% வட்டி செலுத்த வேண்டியிருந்தது.
இந்த புதிய சட்டம் அந்தமான் நிக்கோபர் தீவுகள், சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவுகள் ஆகிய இடங்களுக்கும் பொருந்தும்.

More articles

Latest article