டெல்லி:  கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது தொடங்கி உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் விவாதநாளான இன்றும் எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

2023ம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி குடியரசு தலைவர் முர்மு உரையுடன் தொடங்கியது. 2வது நாளான நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மோடி தலைமையிலான பாஜக அரசின் இறுதி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  அதைத்தொடர்ந்து, இன்றுமுதல் பட்ஜெட் தொடர்பாகவும் மற்ற விஷயங்கள் தொடர்பாகவும் விவாதங்கள் நடைபெறும்.

ஆனால், இன்று, எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம், சீன எல்லை விவகாரங்களை கையில் எடுத்து, அதுகுறித்து உடனே விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், சபை மதியம் 2மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.