டெல்லி:

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் நுகர்வோராக எந்தெந்த பொருள் விலை உயர்கிறது. எந்தெந்த பொருள் விலை குறைகிறது என்பதை அறிந்து கொள்ள ஒரு சிறு கண்ணோட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்..

1. ஐ.ஆர்.சி.டி.சி.யில் ஆன்லைன் முன் பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களுக்கு சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2ம் வகுப்பு அல்லது படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுக்கு ரூ. 23 வரை மிச்சமாகும். இதர வகுப்புகளுக்கு ரூ. 46 வரை மிச்சமாகும். ஐ.டிக்கெட் புக்கிங்கில் இரண்டாம் வகுப்பு அல்லது படுக்கை வசதி டிக்கெட்டுக்கு ரூ. 92 வரையிலும், இதர வகுப்புகளுக்கு ரூ. 138 வரை மிச்சமாகும்.

2. புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு அதிக இருமல் ஏற்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளது. ஆம், கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 கோல்டு பிளாக் கிங்ஸ் சிகரெட் ஒரு பாக்கெட் விலை ரூ. 125ல் இருந்து மேலும் ரூ. 4 அதிகரிக்கிறது.

3. ஆறு முதல் 9% வரையிலான சுகாதார வரி விதிப்பு உயர்வு காரணமாக பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விலை உயர்கிறது. ஒரு டின் ரஜ்னிகாந்தா பான் மசாலா தற்போதுள்ள விலையான ரூ.440ல் இருந்து மேலும் ரூ. 10 வரை அதிகரிக்கிறது.

4. இறக்குமதி செய்யப்படும் ஆர்.ஓ. தாது பொருளுக்கு (சவ்வு) 2.5 சதவீத சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் விலை உயரும். இதன் விலை தற்போது ஆயிரத்து 800 ரூபாய். இதில் மேலும் ரூ. 43 உயரும்.

5. வெள்ளி பொருட்களுக்கு 12.5 சதவீதமாக சுங்க வரி விதிப்பு உயர்த்தப்படுகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் 100 கிராம் வெள்ளிக் கட்டி விலை 5 ஆயிரத்து 96 ரூபாயில் இருந்து ரூ. 650 மேலும் உயர்கிறது.

6. தொலைதூரக் கல்வி கட்டணத்துக்கு சேவை வரியில் இருந்து நிர்வாக கல்வி பிரிவுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 ஆண்டு கொண்ட ஐஐஎம் பிஜிடிஎம் கல்வி பயில செலவாகும் ரூ. 16 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சம் குறையும்.

7. இறக்குமதியாகும் செல்போன்களுக்கு பயன்படுத்தப்படும் அச்சடிக்கப்பட்ட சர்க்யூட் போர்டுகளுக்கு சிறப்பு கூடுதல் சுங்க வரி 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் செல்போன் விலை உயரும். இறக்குமதி செய்யப்பட்ட சர்க்யூட் போர்டுடன் கூடிய ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள போன் விலை ரூ. 120 வரை உயரும்.

8. முந்திரி பருப்பக்கான சுங்க வரி 15 சதவீதமாக உயர்த்தப்படடுள்ளது. அதனால் ரூ. 800 மதிப்புள்ள ஒரு பாக்கெட் இனி ரூ. 865ஆக விற்கும்.

9. ஊழியர்கள், சிறு தொழில் அதிபர்கள், தொழில் முறை வல்லுனர்கள் செலுத்தும் வாடகை ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தால் 5 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும்.