லக்னோ:

உ.பி. மாநிலம் பதவுன் மாட்டம் துக்ரையா கிராமத்தில் இருந்த சட்ட மேதை அம்பேத்கர் சிலையை மர்ம ஆசாமிகள் கடந்த 7ம் தேதி உடைத்துவிட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

தகவலறிந்த பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் ஹேமந்திர கவுதம் சிலை பார்வையிட்டார். பின்னர் புதிய அம்பேத்கர் சிலை செய்து அங்கு நிறுவ முடிவு செய்தார். ஆக்ராவில் உள்ள சிற்பியின் உதவியை நாடினார். சிற்பியும் அம்பேத்கர் சிலையை செல்போனில் படம் பிடித்து கவுதமுக்கு அனுப்பினார்.

கட்சியின் இதர நிர்வாகிகளும் இந்த சிலை பார்த்துவிட்டு நிறுவ சம்மதித்தனர். சிலை நிறுவியவுடன் அது காவி நிறத்தில் இருந்ததை கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த செய்திகள் மீடியாக்களில் வெளியானது. இது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியதை தொடர்ந்து சிலைக்கு நீல நிறத்தில் பெயின்ட் அடித்து காவி நிறத்தை மறைத்துவிட்டார் கவுதம். இதன் பின்னர் தான் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.