டில்லி:

17வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் இன்று  மாலையுடன் முடிவடைந்துள்ள நிலையில்,. 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாளை, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி  சந்தித்து பேசுகிறார்.  அவருடன் சந்திரபாபுநாயுடும்  சோனியாவை சந்திக்கிறார். இதன் காரணமாக தலைநகரில் அரசியல் அரங்கம் சூடுபிடித்து வருகிறது.

(பைல் படம்: மாயாவதியுடன் சோனியா – சந்திரபாபு நாயுடு)

மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற பலத்த  எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ள நிலையில், பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் களத்தில் குதித்துள்ளன. பாஜகவுக்கு மாற்றாக புதிய அரசு ஆட்சி அமைக்க  மும்முரம் காட்டி வரும் காங்கிரஸ் உள்பட மாநில கட்சிகள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க தெலுங்குதேச தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக டில்லியில் முகாமிட்டுள்ள நாயுடு, மாநில கட்சி தலைவர் களை சந்தித்து வருகிறார். ஏற்கனவே கம்யூனிஸ்டு தலைவர்கள், அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பல தலைவர்களை சந்தித்துள்ள நிலையில்   இன்று உ.பி.யில் மாயாவதி, அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார். ஏற்கனவே மம்தா பானர்ஜி, ஸ்டாலின் உள்பட பல தலைவர்களை சந்தித்துள்ள நிலையில், நாளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

ஏற்கனவே சோனியா காந்தி வரும் 23ந்தேதி ஐக்கிய முற்போக்கு தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாளை  பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியுடன் சேர்ந்து சந்திரபாபு நாயுடுவும்  சோனியாகாந்தியை சந்தித்து பேச உள்ளனர். இதன் காரணமாக தலைநகரில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அடுத்தகட்டமாக புதிய அரசு அமைப்பது தொடர்பாகவும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி தொடர்பாகவும் இப்போதே ஆலோசனைகளை தொடங்கியுள்ளன.

ஏற்கனவே மாநில கட்சிகளை கொண்ட 3வது அணி ஆட்சி அமைக்கும் முயற்சியில்  தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் களமிறங்கியுள்ள நிலையில்,  அவருக்கு போட்டியாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் களமிறங்கியுள்ளார். இதன் காரணமாக மத்தியில் அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.