சென்னை: மருங்கூர் அகழ்வாய்வில் கிடைக்கபெற்ற ‘உடைந்த கத்தி’ மற்றும் பொருட்கள் மூலம், மருங்கூர் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளம் என்பது உறுதியாகி இருப்பதாக நிதியமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கடலூா் மாவட்டம், மருங்கூரில் 2025ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி அகழாய்வுப் பணிகளை முதல்வா் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா். சென்னானூர், கொங்கல்நகரம், மருங்கூர் ஆகிய இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் உடைய பானை ஓடுகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மருங்கூர் அகழாய்வில் இராசராசன் காலச் செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி ஆகியவை கிடைத்தன. 122செ.மீ ஆழத்தில் ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள் இரண்டு கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டில் அரிக்கமேடு, வசவசமுத்திரம், பூம்புகார், அழகன்குளம், கொற்கை, கீழடி ஆகிய இடங்களிலும் ஆந்திரா, ஒரிசா மாநிலக் கடற்கரை ஓரங்களில் உள்ள தொல்லியல் தளங்களிலும் இத்தகைய ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள் கிடைக்கின்றன. பொதுவாக ரௌலட்டட் பானை ஓடுகள் உரோம நாட்டுப் பானைகள் எனக் கருதப்பட்டு வந்தன. தென்னிந்தியாவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டி வாழ்ந்த மக்களால் தயாரிக்கப்பட்ட மட்கலன்கள் என்று அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. இத்தகைய ரெளலட்டட் மட்கலன்கள் சங்க காலம் என்கின்ற தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்தவை. எனவே, மருங்கூர் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த தொல்லியல் தளம் என்பது உறுதிசெய்யப்படுகின்றது.

தற்போது, மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 257 செ.மீ. ஆழத்தில், 22.97 கிராம் எடையும், 13 செ.மீ நீளமும், 2.8 மி.மீ தடிமனும் கொண்ட இரும்பி னாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கத்தி கிடைத்துள்ளதன் மூலம், தொல் தமிழர் நாகரிகம் இரும்பின் பயன்பாடு அறிந்து, அதன் நுட்பங்களை கற்றுத்தேர்ந்திருந்தது புலப்படுகிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இரும்பின் தொன்மை குறித்து வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அறிவியல் ஆய்வு முடிவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகிற்கு அறிவித்த ஒரு சில தினங்களில், கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 257 செ.மீ. ஆழத்தில், 22.97 கிராம் எடையும், 13 செ.மீ நீளமும், 2.8 மி.மீ தடிமனும் கொண்ட இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், இரும்பினாலான அம்பு முனை, ஆணிகள் கிடைத்து வந்த நிலையில், தற்போது கத்தி கிடைத்துள்ளதன் மூலம், தொல் தமிழர் நாகரிகம் இரும்பின் பயன்பாடு அறிந்து, அதன் நுட்பங்களை கற்றுத்தேர்ந்திருந்தது புலப்படுகிறது.
இதற்கு முன்னர் மருங்கூர் அகழாய்வில், இராஜராஜ சோழன் காலத்துச் செம்பு காசுகள், அஞ்சனக் கோல், அகேட், சூதுபவளம், கண்ணாடி மணிகள், ரெளலட்டட் பானை ஓடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது இரும்பினாலான கத்தி கிடைத்துள்ளதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளம் இது என்பது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.