ராமேஸ்வரம்,
லங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.

பிரிட்ஜோ கடந்த 7 நாள்களாக நடைபெற்று வந்த மீனவர்கள் போராட்டம் காரணமாக இறந்த மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து போட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பிரிட்ஜோவின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  6-ம் தேதி இரவு இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராமேஸ்வரம் பகுதி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ உயிரிழந்தார். இதை கண்டித்து, தமிழகம் முழுவதும் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அல்லது அதிகாரிகள் நேரில் வந்து உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மீனவர்களின் இந்தப் போராட்டத்துக்கு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் சென்று தங்களின் ஆதரவைத் தெரிவித்து வந்தனர். மீனவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கைச் சிறைகளில் உள்ள 85 தமிழக மீனவர்களை இலங்கை விடுதலை செய்தது.

அதேவேளையில், பிரிட்ஜோவை தாங்கள் சுடவில்லை என்றும்,  இருப்பினும் இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்தது.

இந்நிலையில் போராட்டம் இன்றோடு  7 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நேற்று, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீனவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, “மீனவர் பிரிட்ஜோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்து தண்டனை வழங்கப்படும்; இலங்கையில் உள்ள படகுகள் மீட்டுத் தரப்படும்; உயிரிழந்த மீனவரின் குடும்பத்தில் ஒருவருக்கு மத்திய அரசு பணியும், நிவாரணமும் வழங்க பரிசீலனை செய்யப்படும்” என்று மத்திய அரசுத் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து இதுகுறித்து, மீனவர்கள் கலந்தாலோசித்து முடிவு செய்தனர். அதன்படி இன்று பிரிட்ஜோவின் உடலைப் பெற்று அடக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

இன்று நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு பின்னர்  பிரிட்ஜோவின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தங்கச்சிமடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அறிவித்தனர்.

அதன்படி இன்று காலை முதல் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்  நடந்து வருகிறது. போராட்டம் முடிந்தபிறகு பிரிட்ஜோ உடல் அடக்கம் நடைபெற இருக்கிறது.

உண்ணாவிரதம் முடிந்ததும்,  துப்பாக்கி சூட்டில் இறந்த பிரிட்ஜோவின் உடலை பெற்று தங்கச்சி மடம் குழந்தை ஏசு ஆலயத்தில் இரங்கல் திருப்பலி நடைபெறும் என்றும்,  அதன்பின் அந்தோணி யார்புரம்  கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்படுவதாக மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.