நெல்லை: திருநெல்வேலியில் லஞ்சம் வாங்கிய இ.பி.எஃப்.ஓ அதிகாரி  சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அமலாக்க அதிகாரி ஒருவர் புகார்தாரரிடம் இருந்து ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, மத்திய புலனாய்வுத் துறை  கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் திருநெல்வேலியில் நடைபெற்றுள்ளது.

திருநெல்வேலியில் மென்பொருள் நிறுவன உரிமையாளரிடம் ரூ. 15 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இ.பி.எஃப்.ஓ அதிகாரி மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.  திருநெல்வேலியில் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வரும் புகார்தாரரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பெற்றதாக மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் ரோஸ்கார் யோஜனா திட்டத்தைப் (புதிய ஊழியர்களுக்கு மத்திய அரசின் EPF பங்களிப்புகளை ஆதரிப்பதன் மூலம் முறையான துறையில் புதிய வேலைகளை உருவாக்குவதற்கான திட்டம்) பெற்ற நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி, புகார் அளித்த நிறுவனத்திடம் இருந்து ஆவணங்களை சேகரித்து சரிபார்த்ததாகவும், அந்தத் திட்டத்தின் கீழ் நிறுவனம் ரூ. 3 கோடி (தோராயமாக) பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த தொகையில் 5 சதவீதத்தை புகார்தாரரிடம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது என்று சி.பி.ஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.