டெல்லி: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுக்கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், கார்த்தி சிதம்பரத்தை மே 30 வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேவேளையில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.
சீனர்களுக்கு சட்டவிரோதமாக, ‘விசா’ வாங்கித் தந்த விவகாரத்தில், கார்த்தி சிதம்பரம் இன்று (மே 26) சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் சார்பில், டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தை மே 30 வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, அவரது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது மகனும், சிவகங்கை எம்.பி., யுமான கார்த்தி சிதம்பரம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பல புகார்கள் உள்ளன. இதுதொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சீன நாட்டினர் 263 பேருக்கு, சட்ட விரோதமாக ‘விசா’ பெற்று கொடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிபிஐ அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதுடன், இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன், 55, என்பவரை டில்லி சி.பி.ஐ., கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையடுத்து, முதல் குற்றவாளி பாஸ்கரராமன், இரண்டாவது குற்றவாளி கார்த்தி சிதம்பரம் மீது டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, சென்னை, டில்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், 18 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் நடத்திய விசாரணையில் சட்ட விரோதமாக விசா பெறுவது பற்றி, சீன நாட்டினருடன் பாஸ்கர ராமன், தகவல் பரிமாற்றம் நடத்தியதற்கான ஆதாரங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து நேற்று (25ம் தேதி) டில்லி திரும்பிய கார்த்திக் சிதம்பரம் இன்று சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். பாஸ்கர ராமனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது அவர் அளித்த பதிலின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஜராவதற்கு முன்பாக கார்த்தி சிதம்பரம் கூறுகையில், ‛எந்த ஒரு சீனருக்கும் விசா பெற நான் உதவவில்லை’ என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தை மே 30 வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.